மருத்துவர்களால் இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறை பல மரணங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களில் 80 வீதத்துக்கு அதிகமானவற்றை இலங்கை இறக்குமதி செய்கிறது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு தீர்ந்து வருவருகிறது. இதனால் மருந்துகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிற நிலை உருவாகியுள்ளது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள 950 படுக்கைகள் கொண்ட மகரகம -அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், அவர்களது அன்புக்குரியவர்கள் மற்றும் மருத்துவர்கள் மருந்துகளின் பற்றாக்குறையால் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள்.
இந்த நிலை புற்று நோயாளிகளை பொறுத்தவரை மிகவும் மோசமானது என டாக்டர் ரொஷான் அமரதுங்க ரொய்ட்டஸிடம் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் நாங்கள் காலையில் சில அறுவை சிகிச்சைகளுக்குத் திட்டமிட்டாலும் விநியோகச் சிக்கல்களால் பின்னர் அதனைச் எங்களால் செய்ய முடியாமல் போகலாம். நிலைமை விரைவாக மேம்படவில்லை என்றால் பல நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டயாலிசிஸ் நோயாளிகளுக்கான ஊசி, அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் சில புற்றுநோய் மருந்துகள் உட்பட சுமார் 180 வகையான மருந்துகள் தீர்ந்து வருவதாக மருந்துப் பொருட்களை கொள்வனவு பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரி ஒருவர் ரொய்ட்டஸிடம் தெரிவித்துள்ளார்.