இலங்கையில் சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அதன்படி , இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் , 17 இலட்சத்து 65 ஆயிரம் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 7 இலட்சத்து 30 ஆயிரம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3300000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்த பலனை அனுபவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாதத்திற்கான உதவித்தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை வழிநடத்துவதில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் முக்கிய பங்காற்றுகின்றது.
இதன்படி, சமுர்த்தி உதவி பெறுகின்ற குடும்பங்கள் உட்பட அனைத்து பயனாளிகளின் குடும்பங்களுக்கும் மாதாந்த கொடுப்பனவை நேரடியாக அவர்களது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சமுர்த்தி உதவி பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 5000 முதல் 7,500 வரை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் இயங்கி வரும் சமுர்த்தி வங்கிகள் ஊடாக பணத்தை பெறுவதற்கு அவர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.