இலங்கையின் அரச செலவுகள் 250 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான செலவுகளை 250 பில்லியன்களினால் குறைப்பது குறித்த வழிமுறைகளை திறைசேரி பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே இந்த ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலீடாக இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதில் குறிப்பாக அரசாங்கத்தின் மூலதன செலவுகள் வெகுவாக குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் செலவு குறைப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் (Ranil WIckremesinghe) பரிந்துரை செய்துள்ளார்.
வரி வருமானங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ நிதி வழங்கப்படும் என்றும் கூறினார்.
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றது.
அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான தீர்மானம் தொடர்பில் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.