முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனைகளை படைத்த பெண்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு பாலமீன்மடு வாடுவீட்டு விடுதியில் நடைபெற்றது.
சாதனைப் பெண்களாக திகழும் விஞ்ஞானத்துறையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்ற அக்கரைப்பற்று தர்ஷிகா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்டு தங்கப் பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது சாதனைப் பெண்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் விளித்தெழு பெண்ணே சர்வதேச மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.