வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.
இத்தகைய வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள்.
மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கீழே உள்ள செய்முறையை படித்து செய்து சுவைத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)
துவரம் பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
புளி – 1 நெல்லிக்காய் அளவு
வெல்லம் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி, வெண்டைக்காய் ஓரளவு சுருங்கும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயார்.
குறிப்பு:
உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க பிடிக்கா விட்டால், அதற்கு பதிலாக சாம்பார் பவுடரை 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.