பிந்திய செய்திகள்

இஞ்சி துவையல் கொஞ்சம் கூட பச்சை வாசம் இல்லாமல் எப்படி செய்வது !

ஜீரண சக்திக்கு உதவக்கூடிய இஞ்சி அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியம் வலுப்படும். அந்த வகையில் இஞ்சியை துவையலாக இப்படி செய்யும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். சுவையான இஞ்சி துவையல் எப்படி எளிமையாக செய்வது?

இஞ்சித் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

இஞ்சி – 200 கிராம், வர மிளகாய் – 10, நல்லெண்ணை – 4 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

இஞ்சித் துவையல் செய்முறை விளக்கம்:

இஞ்சி துவையல் செய்ய முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி துவையலில் பொடித்த வெல்லம் கண்டிப்பாக தேவை. இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு மட்டும் நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். துவையலுக்கு நல்லெண்ணெய் சேர்த்து செய்யப்படும் பொழுது உஷ்ணத்தை தணிக்கும். எனவே வேறு எண்ணெயை பயன்படுத்த வேண்டாம். எண்ணெய் காய்ந்ததும் அதில் வர மிளகாய்களைச் சேர்த்து லேசாக உப்பி வர வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை அதிகம் வறுக்கக்கூடாது

பின்னர் அதே வாணலியில் 2 டீஸ்பூன் அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் அதையும் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இஞ்சி சுருள வதங்கியதும் அதில் எலுமிச்சை அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது லேசாக வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள்.

புளியை சேர்த்து லேசாக வதக்குவதால் அரைபடும் பொழுது புளி சுலபமாக அரைபடும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆற வைத்துள்ள மிளகாய், உளுந்து மற்றும் இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் பொழுது உப்பு சேர்க்கக்கூடாது. பின்னர் அதே வாணலியில் மீதமிருக்கும் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பொரிந்து வந்ததும் அதில் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

உளுந்தை பொன்னிறமாக வறுபட்டதும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவிற்கு இந்த சமயத்தில் உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இறுதியாக பொடித்த வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இஞ்சி துவையலின் நிறம் மாற நன்கு இடை விடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். நிறம் மாறி இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு சுடச்சுட இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் பரிமாற வேண்டியது தான்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts