பிந்திய செய்திகள்

பாவக்காய் புளி குழம்பு

புளி குழம்பு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறும். புளிப்பும், காரமும் கலந்த இந்த புளி குழம்பு கெட்டியாக வைக்கும் பொழுது அதன் சுவையே தனி தான். பாகற்காய் என்றாலே பிடிக்காதவர்களுக்கு இந்த முறையில் ஒரு முறை புளி குழம்பு வச்சு கொடுத்து பாருங்க, பிறகு பாவகாய் வேண்டாமென்று சொல்லவே மாட்டார்கள். ரொம்பவே அசத்தலான சுவையில் பாவக்காய் புளி குழம்பு எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பாவக்காய் புளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: பாவக்காய் – கால் கிலோ, கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பூண்டு பற்கள் – 10, பெரிய வெங்காயம் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெரிய தக்காளி – 2, புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

பாவக்காய் புளிக்குழம்பு செய்முறை விளக்கம்: முதலில் பிஞ்சு பாவக்காய் ஆக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விதைகளை நீக்கி வட்ட வட்டமாக மெல்லிதாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை அளவிற்கு புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் நீங்கள் வெட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். மொறுமொறுவென நிறம் மாற பாவக்காய் பொரிந்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். பின்னர் சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து தோலுரித்த பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கியதும், குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு வதக்க வேண்டும்.

இவற்றின் பச்சை வாசம் போனதும் ரெண்டு பெரிய தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சேர்க்கும் பொழுது புளி குழம்பு ரொம்ப சூப்பராக வரும். பிறகு பொரித்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து வதக்க வேண்டும். 2 நிமிடம் நன்கு இவற்றுடன் வதக்கிய பின்பு கரைத்து வைத்த புளி மற்றும் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். புளி குழம்பு கெட்டியாக இருக்க வேண்டும் எனவே அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு துண்டு வெல்லம் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கெட்டியாக கொதிக்க விடுங்கள். எண்ணெய் பிரிந்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவிப் பரிமாற வேண்டியது தான். இதில் வடகம் தாளித்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். ரொம்பவே சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் புளிக்குழம்பு கொஞ்சம் கூட கசப்பு இல்லாமல் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு நிச்சயம் இருக்கும். சாதம் மட்டும் அல்லாமல் இட்லி, தோசைக்கு கூட சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த பாவக்காய் புளிக்குழம்பு நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts