பிந்திய செய்திகள்

பருப்பு பாயாசம் செய்ய போறீங்களா?

விதவிதமான பருப்பு வகைகளில் பாசி பருப்பு போட்டு செய்யப்படும் இந்த பாயாசம் ரொம்பவே வித்தியாசமானது. ஆரோக்கியம் நிறைந்த பாசிப்பருப்பு பாயாசம் சட்டுனு 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

பால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த ஹை லெவல் பாயாசம் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். ஒருமுறை இப்படி பாசிப்பருப்பு பாயாசம் செய்து பாருங்கள், வீட்டில் அனைவரும் உங்களை பாராட்டி தள்ளிவிடுவார்கள்.

சுவையான பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு – அரை கப்
வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய் – 3
பால் – அரை கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – கால் கப்
பாதாம்பருப்பு – 5
மந்திரி பருப்பு – 10
உலர் திராட்சை – 10
தேங்காய் பால் – கால் கப்.

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு பாசிப் பருப்பை சேர்த்து வாசம் வர நன்கு பொன்னிறமாக சிவக்க வறுக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து வறுத்தால் சுலபமாக வறுபட்டு விடும்.

பின்னர் அதனை நன்கு கழுவி ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெல்லத்தை எப்பொழுதும் கரைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும். அதில் கண்ணுக்கு தெரியாத தூசுகளும், மண்ணும் இருக்கும். அதை ஒரு வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். வெல்லம் கொதிக்கும் பொழுது நீங்கள் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாசி பருப்பு சேர்த்ததும் நன்கு கொதித்த பின் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய பால் அல்லது காய்ச்சாத பால் எதுவாகினும் பரவாயில்லை. பால் சேர்த்து கொதித்ததும் மூன்று ஏலக்காய்களை நன்கு பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஏலக்காய் தூள் இருந்தால் கால் டீஸ்பூன் அளவிற்கு சேர்த்தால் சுவையாக இருக்கும். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு நெய் ஊற்றி காய்ச்சுங்கள்.

நெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நட்ஸ் வகைகள் உங்கள் விருப்பம் போல் எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம். பாதாம், முந்திரி, திராட்சை அனைத்தும் நெய்யில் வறுத்து தாளிக்க வேண்டும்.

தாளித்த பொருட்களை சேர்த்ததும் நன்கு கொதிக்க விடுங்கள். பாயாசம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பை அணைத்த பிறகு தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சூடாக இருக்கும் பொழுது தேங்காய் பால் சேர்த்தால் பால் திரிந்து விடும்.

அடுப்பின் சூட்டிலேயே 2 நிமிடம் வைத்து விட்டு பின்னர் சுடச்சுட பரிமாற வேண்டியது தான். இந்த முறையில் ஒரு முறை நீங்கள் சிறு பருப்பு பாயாசம் செய்து பாருங்கள், ரொம்பவே வித்தியாசமான சுவையுடன் ரிச்சாக சூப்பராக இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts