பிந்திய செய்திகள்

சுவையான முருங்கைக்காய் டிக்கி

வீட்டில் முருங்கையும், வாழையும் இருந்தால் ஆரோக்கியத்திற்கு குறைவே இருக்காது என்று கூறலாம். சாதரணமாக தமிழ் குடும்பங்களில் இந்த இரண்டு மரங்களும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இம்மரங்கள் தன்னை அத்தனை பாகங்களிலும் மனிதனுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. மனிதனுக்கு கிடைத்த அருட்பெரும் பிரசாதங்களில் இந்த முருங்கை மரமும் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கைகாய் அடிக்கடி சமைத்து உண்பவர்களுக்கு நல்லதொரு ஆரோக்கியம் கிடைக்கும். முருங்கைக் கீரையில் இருக்கும் இரும்பு சத்துக்கள் பெண்களுக்கு நல்லது. இப்படி முருங்கையின் குணங்கள் ஏராளமாக இருக்க, அதன் காயில் இருந்து எடுக்கப்படும் சதைப்பற்றை கொண்டு செய்யப்படும் இந்த முருங்கைக்காய் டிக்கி ரொம்பவே சுவையான ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது.
முருங்கைக்காய் டிக்கி எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். –

முருங்கைக்காய் டிக்கி செய்ய தேவையான பொருட்கள்:

முருங்கக்காய் – 3, உருளைக்கிழங்கு – 4, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, கரம் மசாலா – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கார்ன் ஃப்ளார் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

முருங்கைக்காய் டிக்கி செய்முறை விளக்கம்:

முதலில் முருங்கைக்காய்களை சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது நன்கு ஆறிய பின்பு முருங்கைக்காய் உள்ளிருக்கும் சதைப்பற்றை மட்டும் தனியாக வழித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே குக்கரில் 4 உருளைக் கிழங்குகளை இரண்டாக வெட்டி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து ஆறியதும் தோல் நீக்கி சதைப் பற்றை நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள். முருங்கைக்காய் சதையுடன், மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இவற்றுடன் கரம் மசாலா தூள், சீரகத்தூள், கான்பிளவர் மாவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு பச்சை மிளகாய்களை பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் வடை மாவு போல கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் கைகளில் தட்டை தட்டையாக வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் தட்டிய வடைகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் நன்கு சிவக்க வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக விடுங்கள். இரண்டு புறமும் நன்கு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். உள்ளே இருக்கும் சதை பற்று வேகுவதற்கு சிறிது நேரம் ஆகும் எனவே மிதமான தீயில் வைத்து வறுப்பது மிகவும் நல்லது. பிறகு எண்ணெயை வடிகட்டி விட்டு சுடச்சுட மாலை நேரத்தில் டீயுடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த முருங்கைக்காய் டிக்கி இதே மாதிரி நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள், உங்களை பாராட்டு மழையில் நனைய வைத்து விடுவார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts