Home சமையல் பழைய சாதத்தில் வடகம்

பழைய சாதத்தில் வடகம்

0
பழைய சாதத்தில் வடகம்

மீதமான சாதத்தில் இப்படி வடகம் வைத்தால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இதை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் போது வாசம் சாப்பிடச் சொல்லி இழுக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். கமகம வாசத்துடன் சூப்பரான பழைய சாதம் வடகம் எப்படி வைப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

முந்தைய நாள் சாப்பாடு நம்முடைய வீட்டில் மீதமாகியிருந்தாலும் சரி, அல்லது வடகம் வைப்பதற்காகவே நீங்கள் நிறைய சாதம் வடித்து எடுத்து வைத்துக் கொண்டாலும் சரி, அது நம்முடைய விருப்பம் தான். தண்ணீர் ஊற்றாமல் இரவு வடித்த சாதத்தை அப்படியே மறுநாள் காலை எடுத்து வைத்தாலும் அதில் வடகம் வைக்கலாம். தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்திலும் வடகம் வைக்கலாம்.

2 கப் அளவு பழைய சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் எடுத்துக்கொள்ளலாம். 2 கப் அளவு பழைய சாதத்திற்கு, 3 லிருந்து 4 பச்சை மிளகாய் சரியாக இருக்கும். மிக்ஸி ஜாரில் முதலில் 3 பச்சை மிளகாய்களை போட்டு தண்ணீர் எதுவும் கூறாமல் மைய அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு எடுத்து வைத்திருக்கும் பழைய சாதத்தையும் அரைத்த பச்சை மிளகாயுடன் மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, மிகக் குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி சாதத்தை மொழுமொழுவென அரைத்துக் கொள்ள வேண்டும்.

நிறைய தண்ணீர் ஊற்றி சாதத்தை அரைக்கக்கூடாது. இந்த இடத்தில் கவனம் தேவை. மொழுமொழுவென அரைத்த இந்த சாதத்தை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இதோடு 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது நமக்கு வடகம் வைப்பதற்கு சாதம் தயாராக உள்ளது.

வெயில் வருவதற்கு முன்பாகவே மொட்டை மாடியில் ஒரு ப்ளாஸ்டிக் கவரை விரித்து அதன் மேலே ஒரு சிறிய குழி கரண்டியில் இந்த மாவை வைத்து லேசாக பரப்பி விடவேண்டும்.இதேபோல எல்லா வடகத்தையேம் இட்டு விடுங்கள். கொஞ்சம் திக்காக இந்த வடத்தை வைத்தால் காய்ந்தவுடன் மெல்லிசாக நமக்கு கிடைக்கும். ரொம்பவும் மெல்லிசாக வடகம் வைத்தால், வடகம் காய்ந்த பின்பு உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

நல்ல வெயிலில் மூன்று நாட்கள் இந்த வடகத்தை காய வைத்து விட்டு லேசாக கவரிலிருந்து உங்கள் கையை வைத்து எடுத்தால் வடகம் அழகாக நமக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு கவரில் வடகம் இட இஷ்டமில்லை என்றால் வெள்ளை காட்டன் துணியில் இந்த வடகத்தை இட்டுக் கொள்ளலாம். ஆனால் வடகம் நன்றாக காய்ந்த பின்பு துணியை தலைகீழாகத் திருப்பிப்போட்டு, மேல்பக்கம் நன்றாக தண்ணீர் தெளித்து அதன் பின்பு வடகத்தை துணியிலிருந்து எடுத்து, மீண்டும் ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழைய சாதத்தில் இவ்வளவு அருமையான சுவையான வடகமா என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு இதனுடைய சுவை இருக்கும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி, எண்ணெயை நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்புதான் இந்த வடகத்தைப் போட்டு பொரிக்க வேண்டும். எண்ணெய் சரியாக காய வில்லை என்றால் வடகம் பொறிந்து பெரியதாக கிடைக்காது. வடகத்தை பொரிக்கும்போது சீரக வாசனை அத்தனை அருமையாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here