தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி – ஒரு கப்
பயத்தம் பருப்பு – கால் கப்
மிளகாய் வற்றல் – 4
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிறு குண்டு மணி அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி ஊறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
மற்றொரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பயத்தம் பருப்பை களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
.
அடிகனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரிக்கவும். நன்கு சிவந்து பொரிந்ததும் எடுத்து பொடி செய்துக் கொள்ளவும்
அதே வாணலியில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சற்று சிவக்க வறுக்கவும்.
பிறகு கறிவேப்பிலை, தண்ணீர் வடித்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை போடவும். பருப்பையும் ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.
பிறகு பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத் தூளை போட்டு ஜவ்வரிசி மற்றும் பயத்தம் பருப்பு ஒன்றாக சேரும்படி நன்கு கிளறவும்.
பின்னர் மூடி வைத்து விட்டு இடையில் திறந்து கிளறி கொண்டே இருக்கவும்.
5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்கவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும். உப்புமா பொலபொலவென்று வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
சூடான ஜவ்வரிசி உப்புமா தயார்.