புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளை அதிகமாக நமது உணவுடன் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில் ருசி குறைவாக இருப்பதால் பலரும் இதனை தங்கள் உணவுகளுடன் சேர்ப்பதில்லை. ஆனால் இது போன்ற பருப்பு வகைகளை முறையான வகையில் சமைத்துக் கொடுத்தால் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களும், எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் இந்த கொள்ளு பருப்பு குழம்பை முடிந்தவரை உங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு பருப்பு – ஒரு டம்ளர், சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 6, வரமிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பூண்டு – 10 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன், தனியா – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து
செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் கொள்ளு பருப்பை குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை தண்ணீர் ஊற்றி இரண்டு முறை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 4 அல்லது 5 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நான்கு வரமிளகாய் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.
பிறகு குக்கரை அடுப்பின் மீது வைத்து ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து, கொள்ளு பருப்புடன் 3 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
தக்காளி மற்றும் கொள்ளு பருப்பு இரண்டும் சேர்ந்து வெந்ததும் கொக்கரை கீழே இறக்கி பருப்பு கடையும் மத்து வைத்து நன்றாகக் கடைந்து கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். அதன்பின் அடுப்பின் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும்.
பிறகு இதில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு மற்றும் தனியா சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஆறு பச்சை மிளகாயை இரண்டாக கீறி இவற்றுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியாக மல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டு இந்த கலவையை பருப்புடன் சேர்த்து கிளறி விட்டால் போதும். சுவையான கொள்ளு பருப்பு குழம்பு தயாராகிவிடும்.