அனைவரது வீட்டிலும் அடிக்கடி செய்யக்கூடிய கலவை சாதம் என்றால் லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் இவை மூன்றும் தான். அதிலும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய லெமன் சாதத்தை அடிக்கடி செய்வதுண்டு. எங்காவது பயணம் செய்து வெளியில் செல்வதாக இருந்தாலும், அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுப்பதாக இருந்தாலும் இந்த லெமன் சாதம் மிகவும் ஏற்றதாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான எலுமிச்சை பழ சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரிசி – இரண்டு டம்ளர், எலுமிச்சை பழம் – 3, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 7, எண்ணெய் – 8 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து. –
செய்முறை:
முதலில் சாதம் படிப்பதற்கு அடுப்பில் உலை வைத்து, தண்ணீர் நன்றாக கொதித்ததும், இரண்டு டம்ளர் அரிசியை கழுவி சேர்த்து, சாதம் வடித்துக் கொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சை பழங்களை இரண்டாக அரிந்து, சாறு பிழிந்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் 8 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு இவற்றுடன் ஏழு வர மிளகாயை காம்பு கிள்ளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும். பின்னர் வடிகட்டி வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். அனைத்து சாதத்தையும் சேர்த்து முழுவதுமாக கலந்து முடித்தவுடன், சுடச்சுட சாப்பிட கொடுத்து பாருங்கள். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதேனும் பருப்புத் துவையல், புதினாத் துவையல் செய்து வைத்தால் போதும். எவ்வளவு சாதம் கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.