உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.
முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் மேலும் சில அம்சங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாட்ஸ்அப்பில் குரூப் காலில் நாம் பேசும்போது, எதிரே யார் பேசுகின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கான வேவ்ஃபார்ம் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கான முயற்சியில் வாட்ஸ் ஆப் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன் தவிர கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் வாய்ஸ் கால் செய்யும் வசதி விரைவில் தரப்படவுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் வாட்ஸ்அப்பில் கவர் போட்டோ வைக்கும் வசதியும் விரைவில் வரவுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி தரப்பட்டுள்ள நிலையில், சாதாரண பயனர்களுக்கும் இந்த வசதி தரப்படவுள்ளது.
வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள குரூப் சேவை போல கம்யூனிட்டி சேவையும் தொடங்கப்படவுள்ளது. இந்த கம்யூனிட்டி சேவையில் பல வாட்ஸ்அப் குரூப்களை அட்மினின் அனுமதியுடன் ஒன்றாக இணைக்க முடியும்.
இது மட்டுமல்லாமல், வாட்ஸ்அப்பில் தடை செய்யப்படும் அக்கவுண்ட்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் பயனாளர்களுக்கு, பதில் அளிப்பதற்கான அம்சம் ஒன்றையும் வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் பீட்டா பயனர்களுக்கும், பிறகு பொது பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.