உக்ரைன் முறியடிப்பு தாக்குதல்
ரஷ்யாவின் வான் தாக்குதலை தமது படையினர் முறியடித்து வருவதாகவும், ரஷ்ய போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரைன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.
நாட்டின் கிழக்கில் உள்ள அதன் பிரிவுகள் மீது ரஷ்யா தீவிர எறிகனைத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் ஆயுதப்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கியேவ் அருகே உள்ள விமான நிலையம் மற்றும் பல விமான நிலையங்கள் மீதும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை முறியடித்து உக்ரைன் வான் படை தாக்குதல் நடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷ்ய பரா துருப்புக்கள் இறங்கியதாக வெளியான செய்திகளை உக்ரைன் மறுத்துள்ளது.
ரஷ்ய அதிபரின் நிலைப்பாடு
ரஷ்ய அதிபரின் நிலைப்பாடு ரஷ்யாவின் பாதையில் குறுக்கிட்டால் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் அரச படைகளும் முறியடிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் யாரேனும் தலையிட்டால் அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் தமக்கு இல்லை என்றும், ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை மூலம், உக்ரைன் மக்கள் நாட்டை நடத்துபவர்களை “சுதந்திரமாக தேர்ந்தெடுக்க” முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்
உக்ரைன் மீது தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் பொறுப்பற்ற தாக்குதலுக்கு நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது “எண்ணற்ற பொதுமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் “ஆக்கிரமிப்புக்கு” தீர்வு காண நேட்டோ நட்பு நாடுகள் சந்திக்கவுள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடம் உக்ரைனின் கோரிக்கை
ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“உலகம் உடனடியாக செயல்பட வேண்டும்” அத்துடன் “ஐரோப்பாவின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்விஃப்ட(SWIFT)நிதி பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதில் இருந்து ரஷ்யாவை தடை செய்வது உட்பட, அந்த நாட்டின் மீது உடனடி தடைகளுக்கு குலேபா அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதே வேளையில், உலகம் ரஷ்யாவை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அமெரிக்காவின் பிந்திய நிலைப்பாடு
தாம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கலந்துரையாடியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் நடவடிக்கைகக்கு எதிராக “சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு” தாம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கமளித்ததாக பைடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது புடினின் அப்பட்டமான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், உக்ரைன் மக்களுடன் நிற்கவும் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு தம்மை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஜி7 நாடுகளின் தலைவர்களை தாம் சந்திக்கவுள்ளதாகவும் ரஷ்யாவின் மீது கடுமையான தடைகளை விதிக்கப்போவதாகவும் பைடன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் நிலைப்பாடு
உக்ரைனில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதன் மூலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரத்தக்களரி மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று இங்கிலாந்தின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து விவாதிக்க உக்ரைன் அதிபருடன் பேசியதாகவும், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளின் தீர்க்கமான நடவடிக்கைக்கு அவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கள நிலவரம்
ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்தில் ரஷ்ய துருப்புக்கள் எல்லையை கடந்து வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் சில ஏவுகணைகள், உக்ரைனின் இராணுவ ஏவுகணை கட்டளை மையங்கள் மற்றும் கியேவில் உள்ள இராணுவ தலைமையகத்தை தாக்கியதாக உக்ரைனின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
தமது படையினர், உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பு, வான் பாதுகாப்பு மற்றும் வான் படையின் உயர் துல்லிய ஆயுதங்களையே குறிவைப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
ரஸ்யாவின் இராணுவப் படைகளின் உக்ரைன் மீதான தாக்குதல், நியாயமற்ற தாக்குதல்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய அதிபர் புடின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தேர்ந்தெடுத்துள்ளார், அது பேரழிவுகரமான உயிரிழப்பு மற்றும் மனித துன்பங்களைக் கொண்டுவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தத் தாக்குதல் கொண்டு வரும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஸ்யா மட்டுமே பொறுப்பாகும் எனவும் “உலகின் பிரார்த்தனைகள் உக்ரைன் மக்களுடன் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்டு தீர்க்கமான முறையில் செயற்படவுள்ளதாக பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தியின்படி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, நாட்டில் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைனின் உட்கட்டமைப்பு மற்றும் எல்லைப்படையினர் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் 5 அல்லது 6 பாரிய வெடிப்புச் சத்தங்களை கேட்க முடிந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் கிழக்கு உக்ரைனில் உள்ள போர் மண்டலத்தில் உள்ள யுக்ரேனிய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறும் புடின் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ரஸ்யாவின் படையெடுப்பு “ஐரோப்பிய கண்டத்தில் ஒரு பெரிய போரின் ஆரம்பமாக இருக்கலாம்” என்று உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நள்ளிரவு வேளையில் உரையாற்றிய அவர், ரஸ்யா தாக்குதல் நடத்தினால், “நாங்கள் எம்மை தற்காத்துக்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் ரஷ்ய இராணுவ படைகள் குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.