நியூசிலாந்தில் அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் கடல் மட்டம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு வேகமாக உயரலாம் என நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய கரியமில வாயு உமிழ்வு குறைப்புக் கொள்கைகளின் அடிப்படையில், 2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 0.6 மீட்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நியூசிலாந்தின் பெரும் பகுதிகளில் கடல் மட்டம் இரட்டிப்பாக 1.2 மீட்டராக உயரும் என்று விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டிம் நைஷ் தெரிவித்தார்.
ஒக்லாந்து மற்றும் வெலிங்டன் போன்ற நியூசிலாந்தின் அதிக மக்கள்தொகை கொண்ட பல பகுதிகளில், இந்த தவிர்க்க முடியாத கடல் மட்ட உயர்வு நாம் நினைத்ததை விட வேகமாக நடந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் கடல் மட்டம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு வேகமாக உயரலாம் என நியூசிலாந்து கடல் மட்ட அதிகரிப்பு ஆய்வு அமைப்பின் இணைத் தலைவர் ரிச்சர்ட் லெவி கூறினார்.
நியூசிலாந்து கடல் மட்ட அதிகரிப்பு ஆய்வு அமைப்பு 30 உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களை ஒன்றிணைத்து ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. அரசாங்கம் இதற்குரிய நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த ஆய்வுக் குழு நியூசிலாந்தின் கடற்கரையின் ஒவ்வொரு 2 கிலோமீட்டருக்கும் 2300 ஆம் ஆண்டு கடல் மட்டம் எந்தளவு உயர்ரும் என்ற கணிப்புகளை நேற்று வெளியிட்டது. அதன்படி நியூசிலாந்தில் உள்ளவர்கள் தங்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கடல் மட்டம் எவ்வளவு வேகமாக உயரும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் ஆகியவற்றால் உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு சராசரியாக 3.5 மில்லி மீற்றர் உயர்ந்து வருகிறது.
உலகில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் கரைதல், கிரீன்லாந்து பகுதியில் இருக்கும் பனி அடுக்குகள் உருகுதல், துருவக் கடல்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகுதல் ஆகியவையே கடல் நீர் மட்ட உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், புயல்கள் தாக்கும் போது அவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் உருவாகி அமெரிக்காவைத் தாக்கிய சாண்டி புயல், அதே பகுதியில் கடந்த 1970ம் ஆண்டு தாக்கிய புயலை விட மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. காரணம், இடைப்பட்ட 42 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்ததே என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடல் மட்டம் அதிகரிப்பதால் பல நகரங்களின் கடற்கரைகள் காணாமல் போகலாம். சில குட்டி குட்டி தீவுகள் கடலுக்குள் அமிழ்ந்து போகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.