உக்ரையின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு அச்சத்தை அடுத்து மேற்குலகம் உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளை அதிகரித்துள்ள அதேவேளை, உக்ரையினில் உள்ள தமது தூதரகங்களில் உள்ள அத்தியாவசியமற்ற பணியாளர்கள் தத்தமது குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ள பின்னணியில் ஆயுத உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், உக்ரையினுக்குரிய ஆயுத தளபாட உதவிகளையும் மேற்குலகம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு திட்டங்கள் ஏதும் இல்லை என ரஷ்யா கூறிவந்தாலும், அதன் எல்லைப்புறத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யாவின் இந்த நிலைப்பாட்டை நம்பமுடியாதென மேற்குலக நாடுகள் கூறிவருகின்றன.
இதற்கிடையே உக்ரையின் கொதிநிலையை மைப்படுத்தி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இந்தவாரம் சந்திப்புகள் நடத்தப்படவுள்ள பின்னணியில், உக்ரையினுக்கான ஆயுத உதவிகளை மேற்குலகம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆயுத தளபாடங்களை அனுப்பியுள்ளன.
பிரித்தானியாவில் இருந்து தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் அனுப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தரப்பில் நாசகார ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் மூன்று பால்டிக் நாடுகள் எஸ்ரோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகியன உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்ப தயாராகியுள்ளன.
நெதர்லாந்து இரண்டு F-35 போர் விமானங்களையும், பல்கேரியாவுக்கு அனுப்பவுள்ளது. ஸ்பெயினும் தனது தரப்பில் கருங்கடலுக்கு போர் விமானங்களையும் ஒரு போர்க்கப்பலையும் அனுப்ப முன்வந்துள்ளது.
செக் குடியரசு உக்ரைனுக்கு 152-மில்லிமீற்றர் பீரங்கிகளுக்குரிய வெடிமருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனி உக்ரைனுக்கு முழு வசதிகளுடன் கூடிய கள மருத்துவமனையை வழங்கவுள்ளது.
உக்ரையினை மையப்படுத்திய ரஷ்ய சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய காரணத்தால் ஜேர்மனியின் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் கே-அச்சிம் ஷான்பாக் பதவி விலகியிருந்த நிலையில் இந்த நகர்வு எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.