இன்று (28)ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 1ம் திகதி வரை நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 49 ஆவது அமர்வில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் வெளிவிவகார செயலாளர் கடந்த 25 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் விளக்கமளித்தார்.
இந்த நிறுவனங்கள் இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு ஒரு வகையிலும் சக்திவாய்ந்த நாட்டிற்கு மற்றொரு வகையிலும் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், பாரதூரமான மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் சக்தி வாய்ந்த நாடுகள் தொடர்பில் அந்த நிறுவனங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இலங்கை கட்டுப்பட்டு செயற்படுவதாக பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதன்போது தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகள் ஒரு சமூகத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ மாத்திரமல்ல முழு நாட்டையும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நிறுத்துவதற்கு சிலர் முன்வந்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள அவர், GSP+ சலுகையின் இழப்பு அரசாங்கத்தையும் நாட்டின் பல துறைகளையும் பாதிக்கும் என்று விளக்கினார்.













































