பிந்திய செய்திகள்

ரஷ்யா உக்ரைன் முதல்கட்டப் பேச்சு வார்த்தை தோல்வி போர் முடிவுக்கு வருமா !

வியாழக்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது : லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவா் தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் சொ்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா்.

எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் குலேபா.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாவது :

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது.

எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை.

தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவாா்த்தை அதனை நிரூபித்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சாா்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிா்பாா்த்துள்ளேன்.

அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சாா்ந்து இயங்கவில்லை என்றாா் அவா்.

உலகின் 2 ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ (நேட்டோ) என்ற பெயரில் கடந்த 1949 ஆம் ஆண்டு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து எதிா்த் தாக்குதல் நடத்தும். மேலும், ஓா் உறுப்பு நாட்டில் மற்ற நேட்டோ நாடுகள் ராணுவ நிலைகளை அமைக்க முடியும்.

பிற்காலத்தில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷ்யா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷ்யா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24 ஆம் திகதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷ்யப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் துருக்கியில் சந்தித்து தற்போது நடத்திய பேச்சுவாா்த்தை சண்டை நிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் முடிவடைந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts