இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகள் வெற்றியை பதிவு செய்தன.
5 அணிகள் பங்கேற்று வரும் இப்போட்டித் தொடரின் நேற்றைய தினம் கொழும்பு அணியை எதிர்த்தாடிய காலி அணி 44 ஓட்டங்களாலும், தம்புள்ளை அணியை எதிர்த்தாடிய யாழ்ப்பான அணி 51 ஓட்டங்களாலும் வெற்றியை ஈட்டின.
கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 49.1 ஓவர்களில் 225 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இவ்வணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தடுமாறியது.
எனினும், 9 ஆவது விக்கெட்டுக்காக கடை நிலை வீரர்களான கவிஷ்க அஞ்சுல மற்றும் அக்கில தனஞ்சய 58 ஓட்டங்களையும் சலன டி சில்வா , கவிஷ்க ஜோடி 64 ஓட்டங்களையும் பகிந்திருந்தது. கடை நிலை துடுப்பாட்ட வீரர்களின் உதவியினால் காலி அணி 225 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி கொழும்பு அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் கவிஷ்க அஞ்சல 75 ஓட்டங்களையும் 11 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான களமிறங்கிய சலன டி சில்வா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும், அணித்தலைவர் அக்கில தனஞ்சய 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 8 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாண அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 101 ஒட்டங்களை விளாசினார். இதில்10 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம்.
இதற்கு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.