பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். 1986ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து கால் இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா 2 கோல் அடித்தார். இதில் முதல் கோலை மரடோனா தலையால் அடிக்க முயற்சிக்கும் போது அவரது கையில் பந்துபட்டு கோல் கம்பத்துக்குள் சென்று விட்டது.

இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். பின்னர் இந்த கோலை, ‘கடவுளின் கை” என்று மரடோனா கூறினார். அப்போட்டியின் போது வீரர்கள் தங்களது டீசர்ட்டுகளை (ஜெர்சி) பரிமாறி கொண்டபோது மரடோனாவின் டீசர்ட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் பெற்றார்.
இந்த மரடோனா டீசர்ட் லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த டீசர்ட், 9.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ரூ.71 கோடி ஆகும்.













































