ஒரு சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கண்கள் திடீரென துடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு விஷயமும், வழக்கத்திற்கு மாறாக நடக்கும் பொழுது நமக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. இந்த வகையில் கண்கள் துடித்த உடன் என்னவாக இருக்கும்? என்ன நடக்கப் போகிறது? என்கிற ஒரு உள்ளுணர்வு மனதை குழப்பிக் கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா? எப்படி துடித்தால், என்ன பலன்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
நம்முடைய கண்கள் துடிக்கும் பொழுது, நம்மையும் மீறி நம்முடைய உள்ளுணர்வு ஏன் இப்படி இப்போது துடித்தது? என்று ஒரு கேள்வி கேட்கும். அறிவியல் ரீதியாக சரியான தூக்கமின்மை காரணமாக பலருக்கு இது போல கண்கள் துடிப்பதாக கூறப்படுகிறது. அதிக நேரம் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது போல கண்கள் அடிக்கடி துடிக்கும். மேலும் மூளை தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களும் இதை சில சமயங்களில் எதிர்கொள்கின்றனர்.
மூளைக்கும், கண்களுக்கும் நிறையவே தொடர்பு உள்ளன. எனவே மூளையில் இருக்கும் பிரச்சனைகள் கூட, கண் துடிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பது அறிவியல் கூற்று ஆகும். ஆனால் ஆன்மிக ரீதியாக கண்கள் துடிப்பதற்கு பல்வேறு பலன்கள் கூறப்பட்டுள்ளது. அதில் வலது கண் துடித்தால் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடக்கும் என்பது பொருளாகும். இடது கண் துடித்தால் மனதில் கவலை வரப் போகிறது என்று அர்த்தமாகிறது. ஏதோ ஒரு விஷயம் உங்களை அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் அர்த்தம்.
வலது கண்ணில் இருக்கும் இமை மட்டும் துடித்தால் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வர இருக்கிறது என்பதை அறிகுறியாக உணர்த்துகிறது. இடது கண் இமை மட்டும் துடித்தால் மனதில் கவலை இருக்கிறது அல்லது கவலை வரப்போகிறது என்பதை குறிக்கிறது எனவே இடது கண்ணை விட, வலது கண் நல்ல பலன்களைக் கொடுக்கிறது. வலது கண்ணில் இருக்கும் வலப்புருவம் துடித்தால் அங்கு திடீர் பண வரவு உண்டாகும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதுவே இடது புறத்தில் இருக்கும் புருவம் துடித்தால் குழந்தை பிறப்பு, உங்களுக்கு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு உண்டாகும் என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது மழலையின் குரல் கேட்கும் வாய்ப்புகள் அமையும் மேலும் கூடவே கவலைகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. கண்கள், புருவம் மட்டுமல்லாமல் புருவ மத்தியில் இருக்கும் இடம் திடீரென சிலருக்கு துடிக்கும். அப்படி இருந்தால் உங்களுக்கு பிரியமானவர்களுடன் இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள்.
கண்களின் நடுப்பாகத்தில் இருக்கும் இடம் ஆனது திடீரென துடித்தால் குடும்பத்தினரை அல்லது மனதிற்கு பிடித்தவர்களை பிரிந்து இருக்கக் கூடிய சூழ்நிலை வரலாம். இப்படி கண்கள், கண்களை சுற்றியுள்ள பாகங்கள், புருவம் போன்ற அமைப்புகள் திடீரென வழக்கத்திற்கு மாறாக துடித்தால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு பலன்களை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இனி உங்கள் கண் துடித்தால் என்ன பலன்? என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.