மங்களகரமாக இருக்கும் பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் மகாலட்சுமி வந்து சேருவாள் என்பது காலம் காலமாக நாம் கடைபிடித்து வரும் ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. முந்தைய காலங்களில் பெண்கள் மட்டுமே வீட்டை கவனிக்கும் பொறுப்பில் இருப்பதால் பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சிலவற்றை ஆண்கள் செய்யக்கூடாது என்றாகிவிட்டது. இந்த வகையில் வீட்டில் ஆண்கள் கோலம் போடுவது சரியா தவறா? ஆண்கள் விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை அதிகரிக்கும் என்கிறார்களே அது சரியா?
முந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்வார்கள். பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பொறுப்புகளை சுமப்பது வழக்கம். இதனால் வீட்டில் செய்யப்படும் எல்லா வேலைகளையும் அந்த பெண்ணே செய்து விடுவாள். ஆனால் இப்போது குடும்பப் பொறுப்பை இருவரும் சுமக்கத் தொடங்கி விட்டனர். இதனால் வீட்டையும் இருவரும் சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு மாறிவிட்டோம். காலத்திற்கு ஏற்ப சில விஷயங்களை மாற்றுவது போல இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் சமமாக நடந்து கொள்வது தான் கணவன், மனைவிக்கு அழகு. ஆண்கள் விளக்கு ஏற்றினால் கடன் பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதெல்லாம் உண்மை அல்ல.
பெண்கள் மங்களகரமானவர்கள், பெண்களுக்குள் மகாலட்சுமி நிறைந்து நிற்கிறார், இதனால் பெண்கள் விளக்கு ஏற்றுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அதற்காக ஆண்கள் விளக்கு ஏற்றுவது தவறு என்று ஆகிவிடாது. ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றுவது உண்டு. கோவிலில் பூஜை செய்யும் பூசாரி ஒரு ஆண் தானே? யாகங்களில் ஆண்கள் கோலம் போடுவது உண்டு. எனவே ஆண்கள் கோலம் போடக் கூடாது, விளக்கு ஏற்றக் கூடாது என்று எந்த வரைமுறையும் இல்லை. பெண் ஏற்றினால் அது சுபீட்சத்தை தரும் என்பது உண்மை தான். ஆனாலும் ஆண்கள் விளக்கு ஏற்றக் கூடாது என்று கூறுவது சரியல்ல!
பெண்களை விட ஆண்கள் சமையல் செய்வதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். அது போலப் ஓவியம் வரைவது, கோலம் போடுவது என்பதும் பொதுவான ஒரு கலையாகும். இதை ஆண்கள் தாராளமாக செய்யலாம். ஒரு வீட்டில் யார் கோலம் போட்டாலும் மகாலட்சுமி மகிழ்ச்சியாக உள்ளே வந்து விடுவாள். ஆண்கள் கோலம் போட்டால் மகாலட்சுமி, நான் உள்ளே வரமாட்டேன் என்று அடம் பிடிக்க போவது இல்லை. இதனால் ஆண்கள் வீட்டில் பெண்கள் இல்லாத சமயங்களில் நிச்சயம் கோலம் போடுவதை செய்ய வேண்டும்
தினமும் விளக்கு ஏற்றும் இல்லங்களில் எல்லா நேரங்களிலும் பெண்கள் ஏற்ற முடியும் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு என ஏதாவது ஒரு முக்கியமான வேலை இருக்கும் சமயங்களில் ஆண்கள் தாராளமாக வீட்டில் விளக்கு ஏற்றலாம். குழந்தைகளில் கூட ஆண், பெண் வித்தியாசமின்றி இருபாலருக்கும் வீட்டில் விளக்கு ஏற்ற கற்றுக் கொடுக்க வேண்டும். காலையில் எழுந்ததும் பள்ளிக்கு செல்வதாக இருந்தாலும், கல்லூரிக்கு செல்வதாக இருந்தாலும் குளித்து முடித்து, வீட்டில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பின்னர் கிளம்ப சொல்லுங்கள்.
இப்படி சிறு வயதிலேயே இறை நெறியை வளர்த்து வந்தால் பெண் மட்டுமல்ல, ஆணும் தீய வழிகளில் செல்லாமல் இறைவழியில் பயணித்து, நேர்மறையான சிந்தனையுடனும் இருப்பான். ஆண்கள் கோலம் போடுவடையும், விளக்கேற்றுவதையும் பார்த்து கேலி கிண்டல் செய்பவர்களை புறக்கணித்து விடுங்கள். வீட்டில் பெண்கள் மாதவிடாய் சமயங்களில் அவர்களுக்கு பதிலாக அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் விளக்கு ஏற்றலாம், மேலும் கோவிலுக்கும் சென்று தாராளமாக பூஜைகள் செய்யலாம்.