பிந்திய செய்திகள்

நம்பிக்கையே மந்திரத்தின் பலம்!

ஏழை இளைஞன் ஒருவன் வறுமையில் வாடினான். தன் பெற்றோரையும் மனைவியையும் காப்பாற்ற வழி எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.

பொருள் ஈட்டி வருவோம் என்ற நம்பிக்கையில் பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டான்.

பசியாலும் நடந்த களைப்பாலும் வருந்திய அவன் வழியிலிருந்து மண்டபம் ஒன்றில் சுருண்டு படுத்து விட்டான்.

அந்த வழியாக மந்திரவாதி ஒருவர் வந்தார். படுத்திருந்த இளைஞனின் நிலையை அறிந்த அவர் அவனுக்கு உதவி செய்ய நினைத்தார்.

தன் மந்திர ஆற்றலால் அங்கே ஓர் அரண்மனையை உண்டாக்கினார். அதற்குள் இருந்து வந்த பேரழகிகள் அந்த இளைஞனை எழுப்பி அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

இரவு முழுவதும் விருந்தும் கேளிக்கையுமாக இனிமையாகப் பொழுதைக் கழித்தான் அவன்.

பொழுது விடிந்தது. பழையபடி மண்டபத்தில் படுத்திருந்த அவன் அருகில் இருந்த மந்திரவாதியைப் பார்த்தான்.

இரவு நடந்த அதிசயங்கள் அனைத்தும் அவரின் செயல் என்பதை அறிந்தான்.

அவரின் கால்களில் விழுந்த அவன் “நேற்றிரவு நான் பெற்ற இன்ப வாழ்வு நாள்தோறும் எனக்குக் கிடைக்க வேண்டும். இல்லையேல் இந்த உயிரைப் போக்கிக் கொலள்வேன். நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்டார் அவர். ஒவ்வொரு இரவும் அந்த அரண்மனையைத் தோன்றச் செய்தார். இளைஞனும் மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழித்தான்.

சில நாட்கள் கழிந்தன.

அவரை வணங்கிய அவன் “நாள்தோறும் உங்களுக்குத் தொல்லை தருவது எனக்குத் துன்பமாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்த மந்திரத்தை எனக்குச் சொல்லித் தாருங்கள். நானே அரண்மனையை உண்டாக்கிக் கொள்கிறேன்” என்று பணிவோடு வேண்டினான்.

“அந்த மந்திரத்தைக் கற்க கட்டுப்பாடுகள் அதிகம். உன்னால் அது முடியாது. அந்த ஆசையை விட்டுவிடு” என்றார் அவர்.

ஆனால் அவனோ மீண்டும் மீண்டும் அவரை வற்புறத்தினான்.

“நான் சொல்லித் தரும் இந்த மந்திரத்தை நீ தண்ணீருக்குள் இருந்தபடியே ஆயிரம் முறை உச்சரிக்க வேண்டும். அப்படி நீ செய்யாமல் தடுக்க உன் முன் பல மாயைகள் தோன்றும்.

நீ மந்திரத்தை உச்சரித்து முடிந்ததும் உன் முன் பெருந்தீ ஒன்று தோன்றும். நீ அதில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். அதன்பிறகு இந்த மந்திரம் உனக்கு பலிக்கும்.

நீ ஏதேனும் தவறு செய்தால் நான் கற்ற மந்திரங்களும் என்னை விட்டு நீங்கி விடும். அதனால் இந்த முயற்சியை விட்டுவிடு” என்றார் அவர்.

“நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன். கவனமாக இருப்பேன்” என்றான் அவன்.

அவரும் அவனுக்கு மந்திரத்தைச் சொல்லித் தந்தார்.

அருகிலிருந்த பொய்கைக்குள் மூழ்கினான் அவன். மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான்.

அவன் முன் பல விதமான மாயைகள் தோன்றின. அவர் தன் மந்திர ஆற்றலால் அவன் குழப்பத்தைப் போக்கிக் கொண்டே இருந்தார்.

ஆயிரம் முறை மந்திரத்தைச் சொல்லி முடித்தான் அவன். பொய்கைக் கரையில் தீ ஒன்று தோன்றியது. அதில் மூழ்கக் கரைக்கு வந்தான் அவன்.

அங்கே கரையில் அவன் மனைவி, தாய், தந்தை, உறவினர்கள் எல்லோரும் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.

அவனைப் பார்த்ததும் “தீயில் பாய்ந்து உயிரை விடாதே. நீ இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வோம்? நீ தீயில் பாய்ந்தால் நாங்களும் உன்னோடு தீயில் பார்த்து இறந்து விடுவோம்” என்று கதறினார்கள்.

அவர்களைப் பார்த்த அவன் “இந்தத் தீ உண்மையானதாக இருந்தால் என்னுடன் இவர்களும் அல்லவா இறந்து விடுவார்கள். மந்திரவாதியின் சொற்கள் உண்மையா என்பது தெரியவில்லையே?” என்று குழம்பினான்.

நடப்பது நடக்கட்டும் என்று துணிவை வரவழைத்துக் கொண்ட அவன் அந்தத் தீக்குள் குதிக்கப் போனான். அந்தத் தீ மாயமாய் மறைந்து விட்டது.

அங்கிருந்த மந்திரவாதிக்கு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பது புரிந்தது. நாமாவது மந்திரத்தைச் சொல்வோம் என்று நினைத்தார். எந்த மந்திரமும் அவர் நினைவுக்கு வரவில்லை.

வருத்தத்துடன் நின்ற இளைஞன் “நீங்கள் சொன்னபடிதான் நடந்து கொண்டேன். நான் சொன்ன மந்திரம் ஏன் பலிக்கவில்லை” என்று கேட்டான்.

அதற்கு அவர் “மந்திரம் பலிப்பதே நாம் அதில் வைத்திருக்கும் நம்பிக்கையால்தான். தீக்குள் பாய்வதற்கு முன் நீ மந்திரத்தின் மேல் சந்தேகம் கொண்டாய். அதனால் அது பலிக்கவில்லை.

உள்ளம் உறுதி இல்லாத உனக்கு மந்திரத்தைக் கற்றுத் தந்ததால் நானும் மந்திரத்தை இழந்துவிட்டேன்” என்றார்.

இருவரும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts