பெண்கள் என்றாலே தலை நிறைய பூ வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். தலையில் பூ வைத்துக் கொள்ளும் பொழுது ஒருவித நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை உணரலாம். பெண்ணின் அழகு முதலில், கூந்தல் அலங்காரத்தில் தான் ஒளிந்து கொண்டுள்ளது. முந்தைய காலங்களில் எல்லாம் தலை நிறைய எண்ணெய் தடவி இறுக்கமாக பின்னிக் கொள்வார்கள்.
ஆனால் இன்றோ 90% பேர் வயது வித்தியாசம் கூட இல்லாமல் தலையை விரித்த கோலமாய் சுற்றி திரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் பூவை எங்கே வைப்பது? தலையில் பூ வைத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? எந்த பூ எந்த பலனை கொடுக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
காலம் மறந்த சில விஷயங்களில் பூ வைக்கும் பழக்கமும் ஒன்றாக இருந்து வருகிறது. பெண்ணிற்கு அழகு என்பது தலையில் சூடிக்கொள்ளும் பூவிலும் இடம்பெற்றுள்ளது. பூச்சூடிய கூந்தல் தனி அழகு பெறுகிறது. தலையை பின்னி கொள்ளாமல், பூவை வைக்கவும் பலர் விரும்புவதில்லை. இன்று பெரும்பாலான பெண்கள் தலையை பின்னி கொள்ளாமல் ஃப்ரீ ஹேர் எனப்படும் கூந்தலை விரித்து கொள்வதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர்.
நம் முன்னோர்கள் 6 மணிக்கு மேல் தலை வாரக்கூடாது என்று கூறுவார்கள். வீட்டில் இவ்வாறு பொழுது சாய்ந்த பின் தலையை வாரிக் கொண்டு இருந்தால் திட்டி விடுவார்கள். ஆனால் இன்றோ 24 மணி நேரமும் தலையில் தான் பெண்களுக்கு கை அடிக்கடி சென்று வருகிறது. கூந்தலை சரி செய்வதில் செலவழிக்கும் நேரத்தில், வேறு பயனுள்ள வேலையைக் கூட செய்துவிட முடியும். அந்த அளவிற்கு அதிக நேரத்தை விரயமாக்கும் இந்த ஃப்ரீ ஹேர் தேவையா? என்பதை பெண்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். ஃப்ரீ ஹேர் விடுவதில் கூந்தலும் ஆரோக்கியத்தை, அதன் வலிமையை மிக சீக்கிரமாகவே இழந்து விடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலையை நன்கு பின்னிக் கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான பூக்களை வைத்துக் கொள்வதன் மூலம் நோய்களும் நீங்கும் என்கிறது ஆன்மீகம். தலையில் தினமும் ரோஜாப் பூ வைத்துக் கொண்டால் அடிக்கடி தலைசுற்றல் வராமல் பாதுகாக்கலாம். ரோஜா பூவில் இருக்கும் வாசம் தலை பாரத்தை குறைத்து தலைசுற்றலை நீக்குகிறது. மேலும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
தலை நிறைய மல்லிப்பூ வைத்துக் கொண்டிருந்தால் பெண்களுக்கு மன அமைதி கிடைக்கும். ஒரு சில பெண்களுக்கு மல்லிகை பூ வைத்தால் தலை சுற்றும் என்று கூறுவார்கள். அதன் அதிகப்படியான வாசம் பல பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளையும் உண்டு பண்ணுகின்றன. ஆனால் தலை நிறைய மல்லிப் பூ வைத்துக் கொள்பவர்களுக்கு மன உளைச்சலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து கண் நோய்களை நீக்குகிறது.
மேலும் செண்பகப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பார்வை கூர்மை உண்டாகும். அது போல உடல் சோர்வை நீக்க தாழம்பூ வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். தாழம்பூ நல்ல வாசம் தருவதோடு மட்டுமல்லாமல், நம்மை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும். தாமரை பூவை சூடி கொள்பவர்களுக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி விடுமாம். அடிக்கடி தாமரை மலரை சூடிக் கொண்டால் மன இறுக்கம் தளர்ந்து ஒருவித புத்துணர்ச்சி அடையலாம்.
கிராமத்து பெண்கள் அதிகம் கனகாம்பரப் பூவை விரும்புகின்றனர். இந்த கனகாம்பரம் பூவை அடிக்கடி வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு தலைவலியே வருவதில்லையாம். இந்த அளவிற்கு பல்வேறு மருத்துவ பலன்களைக் கொடுக்கக் கூடிய பூச்சூடல் எனும் முறையை மறந்துவிடாமல் தொடர்ந்து பெண்கள் கடைப்பிடித்து வருவது மிகவும் நல்லது.