சாதாரணமாக மனிதன் வாழும் வீட்டை கட்டுவதற்கு பல்வேறு சம்பிரதாயங்கள் உண்டு. அனைத்து திசைகளிலும், சரியான அமைப்பில் கட்டப்படும், வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்படும் இல்லங்கள், பெரும்பாலும் சுபீட்சம் பெறும் என்று நம்பப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் பொழுது, நாம் இறைவனுக்காக கட்டப்படும் கோயில்கள் எப்படியானதாக இருக்க வேண்டும்? இப்படியான கோவில்களில் இருக்கும் தெய்வத்திற்கு அதிக சக்தி உண்டா? என்கிற சுவாரசிய தகவல்களைநோக்கி பயணிப்போம்.
பொதுவாக ஆலயங்களை நிறுவுதல் என்பது எல்லோருக்கும் கிடைத்து விடும் பாக்கியம் அல்ல. முந்தைய காலங்களில் எல்லாம் ஒருவருடைய கனவில் வந்து இறைவன் தனக்கு கோவில் கட்டுமாறு கூறுவார். அதனை நிறைவேற்றுவதற்கு உரிய நபரை இறைவன் தான் அந்த காலத்தில் தேர்ந்தெடுத்தார். அப்படி உருவான பல்வேறு கோயில்கள் இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.
அரசர்களுக்கு அடிக்கடி கனவில் வந்து இவ்வாறு கோவில் கட்ட சொல்லி கூறியுள்ளதை நாம் பல கதைகளில் கேட்டிருப்போம். மிகப்பெரிய இராஜாக்கள் பெரிய அளவிலான கோவில்களை கட்டி அது இன்றளவிலும் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது அனைவரும் அறிந்தது தான். இப்படி கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆலயங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றது.
ஆலயத்தின் அமைப்பு கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் இல்லாத இடத்தில் இருக்கும் ஆலயத்தில் இருக்கும் கடவுளுக்கு சக்திகள் இருக்காது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீரில்லாத கோவிலில் இருக்கும் கடவுளும் பயனற்றதாம்.
நதிக்கரை, கடற்கரை, காடு, மலை, குன்று, உபவனம் போன்ற இடங்களில் கோவிலை நிறுவுவது உசிதமானது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. மடம், பாடசாலை, மண்டபங்கள் உள்ள கோவில்களில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு அதீத சக்தி உண்டு. துறவிகள், ஞானிகள், ரிஷிகள், அரசர்கள் செல்லக்கூடாத கோவில்களும் உண்டு தெரியுமா? ஒரு கோவிலின் கருவறையின் மேற்புற அமைப்பு விமானம் எனப்படுகிறது. விமானம், கோபுரம் அமைக்கப்படாத ஆலயங்களில் இவர்கள் தரிசனம் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, வட கிழக்கு ஆகிய திசைகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலயத்திற்கு அதீத சக்தி உண்டு. அது போல சதுரம், முக்கோணம், அறுங்கோணம், விட்டம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு அதிக சக்தி உண்டு. அதிலும் குறிப்பாக சதுரமான அமைப்பை கொண்டுள்ள கோவில்களுக்கு விசேஷமான தன்மைகள் உண்டு.
கல், செங்கல், மரப்பலகையில் உருவாக்கப்படும் கோவில்களுக்கு நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும் தன்மை உண்டு. இப்படி கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நம்முடைய பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும் என்கிறது சாஸ்திரம். எல்லாக் கோவில்களிலும் இருக்கும் தெய்வங்களுக்கு சக்தி இருக்குமா? என்றால் தெரியாது. ஆனால் நாம் மனதால் நினைக்கும் மனம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் தெய்வத்திற்கு நிச்சயம் சக்தி உண்டு எனவே துன்பம் வரும் போது மட்டும் இறைவனை நினைக்காமல் எப்பொழுதும் இறைவனுடைய சிந்தனையாக இருப்பது உங்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கு உரிய வழியாகும் எனவே இறை சிந்தனையுடன், அற நெறியுடன் வாழும் ஒருவருக்கு நிச்சயம் நன்மைகளேயன்றி தீமைகள் நடப்பதில்லை.