பிந்திய செய்திகள்

திருமணமான பெண்கள் இவற்றை விட்டுக் கொடுத்தால், பிறகு ஆசைப்பட்டாலும் கிடைக்காமல் போய்விடும்!!

திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு வரும் பெண் மட்டுமல்ல, அந்த பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் ஆணும் திருமணமான பின்பு பல மாறுதல்களை காண வேண்டியிருக்கும்.

தங்களுக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கையின் கடமையில் இருந்து சற்று கூடுதல் பொறுப்புணர்வு பலவிதங்களில் மனதை உளைச்சலுக்கு கொண்டு செல்லும். திருமணமான புதிதிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டால், பிறகு நீங்களே நினைத்தாலும் அவற்றை செய்ய முடியாது தவிக்கும் சூழ்நிலையில் தள்ளப்பட்டு விடுவீர்கள்.

இன்று பெரும்பாலான இளம் பெண்கள் கணவன் மற்றும் கணவரது குடும்பத்தினை தன் குடும்பமாக நினைத்து நல்ல மருமகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். திருமணமான புதிதில் ஒரு பெண் ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுக்கக் கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

சில பெண்களுக்கு தான் நல்ல இல்லறத்தை நடத்தி செல்ல வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி இருக்கும். இவர்களுக்கு வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கும், அப்படியானவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை! ஆனால் திருமணமான பின்பும் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அதை எக்காரணம் கொண்டும் கணவனுக்காகவும், கணவனின் குடும்பத்திற்காகவும் ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்து விடக்கூடாது.

வேலையை விட்டு சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள் என்று மற்றவர்கள் பரிந்துரைக்கும் பொழுது அதை ஏற்காமல் உங்களுக்கு பிடித்தமான வேலையை தொடர்ந்து நீங்கள் செய்ய மற்றவர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வேலைக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே விட்டுவிட்டால் பிறகு மீண்டும் தொடர முடியாமல் போகும் அபாயம் உண்டு. காதல் திருமணமோ அல்லது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமோ எதுவாக இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு திருமண உரிமத்தை கண்டிப்பாக பதிவு செய்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தினால் மீண்டும் அது தேவையான நேரத்தில் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் உண்டு.

திருமணமான பின்பு கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் அனுசரித்து அவர்களுடைய குடும்பத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் மற்ற உறவுகளை பற்றி புரிந்து அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் உறவுகளுக்குள் நல்லதொரு இணக்கம் உண்டாகும். மீண்டும் அவர்களுடைய உறவுகளை காணும் பொழுது, பேசுவதற்கு ஏதுவானதாக இருக்கும். இதை காணும் உங்களுடைய துணைவருக்கு உங்கள் மீது மதிப்பு அதிகரிக்கும். இதை ஆரம்பத்திலேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

திருமணமான பெண் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நண்பர்கள் மற்றும் அன்புக்கு உரியவர்களிடம் திருமணத்திற்கு முன்பு இருந்ததை போல பேச முடியாவிட்டாலும், ஓரளவுக்கு அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து தொடர்பில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் தயங்காமல் புகுந்த வீட்டாரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போல அவர்களிடம் இவர்களை அறிமுகப்படுத்தவும் செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுத்து விட்டால் நீங்கள் நினைக்கும் பொழுது நிச்சயம் அது தவறாகத்தான் தெரியும்.

அவர்களுடைய பாரம்பரிய வழக்கத்திற்கு ஏற்ப உங்களை தயார் படுத்துவதில் அக்கறை கொள்வார்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், ஆரம்பத்திலேயே அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் மீது இருக்கும் பிரியமும் அதிகரிக்கும். திருமணமான பின் நீங்கள் நீங்களாக இருக்க அதிக அளவு முயற்சி செய்ய வேண்டும். கணவன் மற்றும் கணவன் வீட்டார் அவர்களுக்கு ஏற்ப உங்களை மாற்ற முயற்சி செய்வார்கள் ஆனால் அதை ஓரளவுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. உங்கள் தனித்துவத்தை மறந்து நீங்கள் ஆரம்பத்திலேயே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து விட்டால் பின்பு நீங்கள் நினைத்தாலும் நீங்கள் நீங்களாக வாழ முடியாமல் போய்விடும். இது அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கும், இது உங்களுக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்திற்கும் நல்லதல்ல.

திருமணமான பெண்கள் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இவ்வாறு செய்யச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினால் ஆரம்பத்திலேயே சகித்துக் கொண்டு சென்று விட்டால், அதை அவர்கள் சாதகமாக எடுத்துக் கொள்வார்கள். எனவே ஆரம்பத்திலேயே எல்லா வீட்டு வேலைகளையும் செய்வது, என்னுடைய பொறுப்பல்ல என்பதை நாசுக்காக ஐஸ் வைத்து சொல்லி காட்டி விடலாம். திருமணமான பின்பு ஒரு பெண் தான் சம்பாதிக்கும் பணத்தை தன் பிறந்த வீட்டிற்கு கொடுத்து உதவுவதாக இருந்தால் அதை முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிறந்த வீடு, புகுந்த வீடு மட்டுமல்லாமல் உங்களுக்காகவும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறு தொகையையாவது சேமிக்க பழகிக் கொள்ள வேண்டும். இது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். இவைகளை ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுத்து விட்டால் பின்பு ஏமாற்றம் நிச்சயம்!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts