பிந்திய செய்திகள்

செய்த பாவங்களுக்கு எமலோகத்தில் இருக்கும் சித்திரகுப்தரிடம் சித்ரா பவுர்ணமியில் மன்னிப்பு கேட்பது எப்படி?

தமிழ் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பவுர்ணமியில் எமலோகத்தில் இருக்கும் சித்திரகுப்தர் பிறந்ததாக வரலாறு உண்டு! மனிதன் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை ஒன்று விடாமல் தன் கணக்கு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாம் இறந்த பிறகு நரகம் செல்ல வேண்டுமா? சுவர்க்கம் செல்ல வேண்டுமா? என்பதை தீர்மானிக்கிறார் சித்திரகுப்தர்.

நாம் செய்யும் பாவங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்கக் கூடிய அற்புதமான நாளாக இந்நாள் அமைந்துள்ளது. இன்றைய நாளில் சித்திர குப்தரை எப்படி வழிபடுவது? என்பது போன்ற தகவல்களை தான் இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எமலோகத்தில் எமதர்மனுக்கு உதவியாளராக இருக்கக்கூடியவர் சித்திரகுப்தர்! இவருடைய கையில் இருக்கும் புத்தகத்தில் ஒரு மனிதன் என்னென்ன பாவங்களை செய்கிறான்? என்னென்ன புண்ணியங்களை செய்கிறான்? என்று துல்லியமாக எழுதப்பட்டு இருக்கும். எமலோகம் சென்ற பின்பு நாம் எங்கு அடுத்ததாக பயணிக்க வேண்டும்? என்பதை அந்த புத்தகத்தை பார்த்து எமதர்மனிடம் சொல்பவர் இவர்!

இவர் பிறந்த நாளான இன்று இவரை வணங்கி நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அறியாமல் செய்த பாவங்கள் புண்ணியக் கணக்கில் சேர்த்து எழுதுவார் என்பது ஐதீகம்! பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோவில்களில் ஒன்றாக இருக்கும் காஞ்சிபுரத்தில் வெகுவிமரிசையாக இந்நாள் கொண்டாடப்படும். திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் போன்றவற்றிலும் சித்ரா பௌர்ணமி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

நாம் வீட்டிலேயே எளிதாக சித்ரகுப்தரை வழிபடலாம். 2022 சுபகிருது ஆண்டின் சித்ரா பவுர்ணமி திதி அதிகாலை 2.25 மணிக்கு துவங்கி 12:25 க்கு முடிவடைகிறது. சூரிய அஸ்தமனம் 6:44 மணிக்கு முடிவடைந்து பவுர்ணமி முழுமையாக பூமியில் உதிக்கிறது. பௌர்ணமி திதி முடிவடைவதற்குள் சித்ரகுப்தருக்கு இவ்வாறு வழிபட வேண்டும்.

அதிகாலையிலேயே எழுந்து பூஜை அறையை சுத்தம் செய்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஒரு புதிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் பிள்ளையார் சுழி இட்டு ‘சித்திரகுப்தர் படி அளக்க’ என்று எழுதிக் கொள்ளுங்கள். மேலும் இந்நாளில் நாங்கள் அறியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

பூர்வ ஜென்ம கர்மாக்களின் படி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களில் இருந்து நம்மை பாதுகாக்கவும் சித்ரகுப்தரை வழிபட வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்தமான சித்திரன்னங்கள் அதாவது கலவை சாதங்கள் படைத்து வழிபடலாம். இந்நாளில் உப்பு மற்றும் பால் சார்ந்த பொருட்களை சேர்க்கக் கூடாது எனவே சர்க்கரை பொங்கல் நைவேத்யம் படைத்து எளிமையாக வழிபடுவது சிறப்பம்சமாக உள்ளது.

சித்ரா பவுர்ணமியில் அன்னை பார்வதி தேவியை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், திருமணத்தடைகள் உள்ளவர்களுக்கு திருமண தடைகள் அகலும் என்கிற நம்பிக்கையும் உண்டு, எனவே சித்ரகுப்தரை மட்டுமல்லாமல் இந்நாளில் ஈசனையும், அம்பாளையும் வழிபடுவது சிறப்பு!

மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு சாப்பாட்டை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலா வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை பலப்படும் என்கிற ஐதீகம் உண்டு. இந்நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது, நம் பாவத்தை போக்கும்.

எனவே தீர்த்தக் குளங்கள் இருக்கின்ற கோவிலுக்கு சென்று வழிபடுவது, திருவண்ணாமலை கிரிவலம் செல்வது போன்றவையும் இந்நாளில் செய்யலாம். ஏழை, எளிய குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி தருவது சித்ரகுப்தரின் அருளைப் பெறுவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. மேலும் பாவங்கள் நீங்க அரிசி, காய்கறிகள், வஸ்திர தானங்கள் செய்வதும் மரபு!

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts