காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நாம் செய்யும் ஒரு காரியம் கோலம் போடுதல் ஆகும். கோலம் போடும் பொழுது நம் வீட்டை நோக்கி வரும் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைவதாக நம்பிக்கை உண்டு. காலையில் எழுந்து கோலம் போடாத வீட்டில், மூதேவி வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த வகையில் காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது நாம் செய்யக் கூடாத ஒரு தவறு என்ன? இந்த தவறு செய்தால் என்ன நடக்கும்?தெரியுமா?
காலையில் எழுந்ததும் நல்ல விஷயங்களை கண்ணார பார்க்க வேண்டும். நீதி, நேர்மை, தூய்மை ஆகியவற்றுக்கு சின்னமாக விளங்கும் கொக்கு ஓவியம் உங்களுடைய படுக்கை அறையில் இருந்தால் உங்களுக்கும் இயல்பாகவே நீதி, நேர்மை மற்றும் தூய்மையுடன் இருக்கக்கூடிய குணநலன்கள் வரும் என்று ஓவிய சாஸ்திரம் குறிப்பிடுகிறது. இது போன்ற நல்ல விஷயங்களை பார்த்துவிட்டு கண்விழித்து பிறகு வலது கையால் கதவைத் திறக்க வேண்டும்.
வாசலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும் பொழுது வாசலில் இருந்து வெளியே போகும்படி கூட்ட வேண்டும். குப்பைகள் வீட்டை நோக்கி வரும்படி எக்காரணம் கொண்டும் துடைப்பத்தை கொண்டு கூட்டக் கூடாது. கூட்டி முடித்த பின்பு கண்டிப்பாக தண்ணீர் தெளிக்க வேண்டும். வாசலில் தெளிக்க கூடிய தண்ணீர் துர்தேவதைகளை வாசலிலிருந்து விரட்டியடிக்கும்.
சாதாரண தண்ணீரை காட்டிலும் சாணம் கரைத்த தண்ணீர், மஞ்சள் கரைத்த தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கெட்ட சக்திகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவையும் அழியும். இதனால் தான் சாணம் போட்டு மொழுகுவதை வாடிக்கையாக நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். இன்று இருக்கும் இடத்திற்கு ஏற்ப நம்முடைய வசதியை பார்த்து வாசல் தெளித்துக் கொள்ளலாம். அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தாலும் காலையில் எழுந்ததும் வாசலை துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். இதனால் வாசலில் அமர்ந்து கொண்டு இருக்கும் தரித்திரங்கள் விலகும்.
அழகிய வண்ணக் கோலங்கள் இட்டால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வீட்டிற்குள் நுழைந்து விடுவார் என்பது ஐதீகம். மார்கழி மாதம் மட்டும் அல்லாமல், எப்பொழுதும் வண்ண கோலங்கள் சிறிய அளவிலாவது நீங்கள் போடுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க செய்யும். நீங்கள் போடக்கூடிய கோலம் நேர்த்தியாக இல்லாமல் அடிக்கடி அழித்து போடும்படி நேர்ந்தால் அங்கு தரித்திரம் தாண்டவமாடுகிறது என்று அர்த்தம். உங்களுடைய உள மற்றும் மன நலம் சரியில்லாமல் இருந்தால் தான் இது போல அடிக்கடி கோலத்தை அழித்து அழித்து மீண்டும் கோலத்தைப் போட கூடிய சூழ்நிலை உருவாகும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருந்தால் இது போல பெண்கள் காலையில் எழுந்ததும் அதே நினைவுடன் சென்று கோலம் போட்டு அழித்து அழித்து மீண்டும் போடக் கூடிய நிலை இருக்கும். இப்படி கோலத்தை அழித்து போடுவது அல்லது புள்ளியைத் தவிர்த்து சரியான அமைப்பில் முடிக்காமல் இருப்பது, அலங்கோலமாக கோலம் போடுவது போன்றவற்றை செய்தால் அந்த இடத்தில் மூதேவி சுலபமாக நுழைந்து விடுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. எனவே மகாலட்சுமியை அழைப்பதற்கு பதிலாக மூதேவியை நாம் அழைத்து விடக்கூடாது என்பதால் கோலம் போடுவதில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது, நேர்த்தியாகக் கோலம் போடுவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.